சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கசிறப்பு கவனம் செலுத்தப்படும்
சேலம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் கூறினார்.
சிறப்பு பேட்டி
சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது அமைதியை கெடுக்க அனுமதிக்க கூடாது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநாட்டில் கலந்து கொண்டு சேலம் திரும்பிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் 'தினத்தந்தி' நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
சட்டம்-ஒழுங்கு
கேள்வி:- சேலம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
பதில்:- சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளேன். காரிப்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்கள் விரைவில் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் வர உள்ளது. அதற்கு பதில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
புகார்கள் மீது தனி கவனம்
கேள்வி:- போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
பதில்:- சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் சார்பிலும் புதன்கிழமை தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களால் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும், எப்.ஐ.ஆர். பதிவு செய்யாத புகார்கள் மீது பதிவு குறிப்பு (சி.எஸ்.ஆர்.) வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரிக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் மனுக்கள் சென்றுள்ளது. அதாவது சென்னை, திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அதிகளவில் மனுக்கள் வந்துள்ளது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தனி கவனம் செலுத்தி வருகிறோம்.
2,500 வழக்குகள் பதிவு
கேள்வி:- போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
பதில்:- கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக இந்தாண்டில் இதுவரை சுமார் 2 ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மனம் மாறி வேறு தொழிலில் ஈடுபட காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம்.
கேள்வி:- சாலை விபத்துக்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
பதில்:- விபத்தில்லா சேலம் மாவட்டத்தை உருவாக்குவதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடித்தால் விபத்து நடப்பதை தவிர்க்கலாம். வேகம் முக்கியம் அல்ல, விவேகம் தான் முக்கியம். அதை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க வேண்டும். சாலை விபத்துக்களை தடுக்க முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
கேள்வி:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில்:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனி கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பெண்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் கூறினார்.