மகளிர் உரிமை தொகைக்காக சிறப்பு முகாம்: தவறான தகவலால் கலெக்டர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்


மகளிர் உரிமை தொகைக்காக சிறப்பு முகாம்: தவறான தகவலால் கலெக்டர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்
x

வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பிய பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர்.

நெல்லை,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் சிலரது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கப்பட்டன.

இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்காக கலெக்டர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. அதில், "மகளிர் உரிமைத்தொகை (ரூ.1,000) பெறுவதற்காக மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கவும், உடனே அனைவருக்கும் கிடைக்கும், இன்று மற்றும் வருகிற திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது" என தெரிவிக்கபப்ட்டு இருந்தது.

இந்த தகவல் வாட்ஸ் அப்பில் தீயாக பரவியது. இதனை நம்பிய பெண்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர். குறிப்பாக, நெல்லை, விழுப்புரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்களிடம் வாட்ஸ் அப்பில் வரும் தவறான தகவலை நம்பி யாரும் வர வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த பெண்கள், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகங்களில் சிறிது பரபரப்பான சூழல் நிலவியது.

தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.


Next Story