தியாகிகள் நினைவுச்சின்னங்களின் பராமரிப்பு பணிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் - ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்


தியாகிகள் நினைவுச்சின்னங்களின் பராமரிப்பு பணிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் - ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
x

அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களின் பராமரிப்பு பணிகளில் முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழ்ச் சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களுக்கு அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களின் பராமரிப்பு பணிகளில் முதல்-அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளையும்; சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும், சமூகநீதியைக் காப்பதற்காக போராடியவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டியதும்; அவர்களது பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் அவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும், நினைவு மண்டபங்களையும் அமைத்து மரியாதை செய்ய வேண்டியதும், அவ்வாறு அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை முறையாக பராமரிப்பதும் ஒரு நல்லரசின் கடமையாகும்.

இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், பல்வேறு தியாகிகளுக்கு, தலைவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் பல்வேறு அரசுகளால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், தமிழ் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களையும் கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குறை தற்போதுதமிழ்நாட்டில் நிலவுகிறது.

வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக வாழ்கின்ற காலத்தில் வலியைத் தாங்கிக் கொண்டு பல்வேறு தியாகங்களைச் செய்து வரலாறு படைத்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்கள். ஆனால், ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்ற கேள்வியை செய்தியாளர்கள் என்னிடத்தில் எழுப்பியது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்று பல தலைவர்களின் நினைவிடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற நிலை பரவலாக இருக்கிறது.

இதே போன்று, மாநில சுயாட்சிக்கு தொடர்ந்து குரல் கொடுத்தது, காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு அளித்து சமூகநீதியை நிலைநாட்டியது, கட்டணமில்லாக் கல்வி உட்பட அனைத்தையும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கியது, மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை அளித்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்குவதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை கௌரவிக்கும் வகையில் சென்னை, காமராஜர் சாலை, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஒன்பது அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு, அந்த வளாகத்திற்கும் அம்மா வளாகம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், மேற்படி இடத்தில் பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. இந்தச் சிலையை சுற்றி புற்கள் மண்டிப்போய் கேட்பாரற்ற நிலையில் இருப்பதோடு, அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒளிவிளக்குகள் எரியாமல் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஏற்கெனவே நான் முதல்-அமைச்சர் அவர்களுக்கு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்து இருந்தேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் அரசுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தமிழ்ச் சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவுச் சின்னங்களையும் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் .பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story