நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மகன் தற்கொலை: துக்கம் தாங்காமல் தந்தையும் உயிரை மாய்த்தார்


நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மகன் தற்கொலை: துக்கம் தாங்காமல் தந்தையும் உயிரை மாய்த்தார்
x

நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மகன் தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

குரோம்பேட்டை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வசேகர் (வயது 54), போட்டோகிராபர். இவருடைய ஒரே மகன் ஜெகதீஸ்வரன் (19). மருத்துவம் படிக்க விரும்பிய இவர் 2 முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்தார்.

இதனால் விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தையும் தற்கொலை

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து ஜெகதீஸ்வரன் உடலை செல்வசேகரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மாலையில் உடல் தகனம் முடிந்த பிறகு வீட்டுக்கு வந்த செல்வசேகர், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்த தனது தங்கைகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் முன்பு கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த உறவினர்கள், செல்வசேகர் தவறான முடிவு எடுத்துவிடக்கூடாது என அவருடனேயே பாதுகாப்பாக இருந்தனர். நள்ளிரவில் தூக்கம் வரவில்லை என மொட்டை மாடிக்கு சென்ற செல்வசேகர், அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டின் கீழ் பகுதியில் காலியாக இருந்த அறைக்கு சென்று சைக்கிளில் ஏறி நின்று கேபிள் வயரால் மின்விசிறியில்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சிட்லபாக்கம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பகலில் மகன் உடலை பார்க்க வந்த போலீசார், மீண்டும் இரவில் தந்தை உடலை பார்க்க வந்ததால் அவர்களும் வேதனை அடைந்தனர். ஒரே நாளில் தந்தை-மகன் தற்கொலை செய்து கொண்டதால் அவர்கள் உறவினர்கள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களும் சோகத்தில் மூழ்கினர்.

உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

இந்தநிலையில் தற்கொலை செய்த செல்வசேகர் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், கமிஷனர் அழகுமீனா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை மாணவர்களை தான் நீட் தேர்வுக்கு பறிகொடுத்து இருந்தோம். தற்போது மாணவர்களின் குடும்பங்களையும் பறிகொடுத்து கொண்டிருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் சட்டப்போராட்டம்தான் ஒரே தீர்வு. இல்லை என்றால் எல்லோரும் தெருவுக்கு வந்து போராட வேண்டியதுதான். அப்படி போராடினால் தி.மு.க. மாணவர்கள் பக்கம் நிற்கும். இதை அரசியல் ஆக்க விரும்பவில்லை. தயவு செய்து இந்த மரணத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். மத்திய பா.ஜ.க.விடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வது தயவுசெய்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கொடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் காரில் ஏற முயன்ற உதயநிதி ஸ்டாலினிடம், ஜெகதீஸ்வரனின் நண்பர் பயாஸ் என்பவர், "அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை நீட்டால் மரணம் அடைந்து உள்ளனர். இதற்கு முடிவு இல்லையா?. பணம் இருப்பவர்கள் மட்டும்தான் டாக்டருக்கு படிக்க முடியுமா? இதை தடுத்து நிறுத்துங்கள்" என்றார்.

முன்னதாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் செல்வசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story