துணை ராணுவ வீரர் பிணமாக மீட்பு


துணை ராணுவ வீரர் பிணமாக மீட்பு
x

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் மூழ்கி மாயமான துணை ராணுவ வீரர் பிணமாக மீட்கப்பட்டார்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் மூழ்கி மாயமான துணை ராணுவ வீரர் பிணமாக மீட்கப்பட்டார்.

தடுப்பணை

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பரசன் (வயது25) மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் வினோத் குமார் (25) உள்பட 6 பேர் கடந்த 9-ந் தேதி மாலை திருவேடகம் வைகை ஆற்றில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றனர்.

குளித்துக்கொண்டிருந்த அன்பரசன், வினோத்குமார் ஆகிய 2 பேரும் வைகை ஆற்று வெள்ளத்தில் சுழலில் சிக்கினர். மீதி 4 பேரும் கரையேறி உயிர் தப்பினர். சுழலில் சிக்கிய அன்பரசனும், வினோத்குமாரும் மாயமானார்கள்.

தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன், தீயணைப்புநிலைய அலுவலர்கள் பழனிமுத்து, சதக்கத்துல்லா ஆகியோர் தலைமையில் 25 பேர் கொண்ட தீயணைப்பு படையினர் 4 குழுக்களாக பிரித்து வைகை ஆற்றில் வெள்ளத்தில் மாயமான 2 பேரையும் தேடிவந்தனர்.

தேடும்பணி

இதில் அன்பரசனை மேலக்கால் பாலம் அருகே பிணமாக மீட்டனர். மாயமான வினோத்குமாரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு வரை வினோத்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் தங்கவேல், மதுரை கோட்டாட்சியர் சுகிபிரேமலா, தாசில்தார் நவநீதகிருஷ்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் ஆகியோர் பணிகளை துரிதப்படுத்தினர்.

இவர்களிடம் தேடும் பணி குறித்து கேட்டறிந்து இவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் மதியம் வைகை அணையில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.

நேற்று அதிகாலை தேடுதல் பணியில் தீயணைப்பு படையினரும் தேசிய பேரிட மேலாண்மை மீட்பு குழுவினரும் குழுக்களாக பிரிந்து மாயமான வினோத்குமாரை வைகை ஆற்றில் பல்வேறு பகுதியில் தேடி வந்தனர். இந்தநிலையில் மேலக்கால் வைகை பாலத்தில் கிழக்கு பகுதியில் வினோத்குமார் உடலை மீட்டனர்.

கோரிக்கை

வினோத்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், வருவாய்த் துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர். பலியான 2 பேர் குடும்பத்திற்கும் தலா ரூ. 10 லட்சம் அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story