காரில் 7½ கிலோ தங்கக்கட்டிகள் கடத்தல்: திருச்சி அருகே சிக்கிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


காரில் 7½ கிலோ தங்கக்கட்டிகள் கடத்தல்: திருச்சி அருகே சிக்கிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x

காரில் 7½ கிலோ தங்கக்கட்டிகள் கடத்தல் சம்பவத்தில் திருச்சி அருகே சிக்கிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி

தொடரும் தங்கம் கடத்தல்

திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வருபவர்கள், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும், திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு, தங்கம் கடத்தலை தடுத்து வருகிறார்கள்.

அதே நேரம் இலங்கையில் இருந்தும் ராமேசுவரத்திற்கு கடல் வழியாக தங்கத்தை கடத்தி வந்து, அவற்றை திருச்சி வழியாக சாலை மார்க்கமாக சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் அரசு பஸ்சில் கடத்திச்செல்லப்பட்ட 9 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனாலும் தங்கம் கடத்தல் தொடர்ந்து வருகிறது.

7½ கிலோ தங்கம் பறிமுதல்

இந்தநிலையில் இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு கடல் வழியாக கடத்தி வரப்பட்ட சுமார் 7½ கிலோ தங்கக்கட்டிகளை தேவிப்பட்டணத்தில் பதுக்கி வைத்திருந்தனர். பின்னர், அவற்றை கடந்த 9-ந்தேதி தொண்டியை சேர்ந்த 2 வாலிபர்கள் திருச்சி வழியாக சென்னைக்கு காரில் எடுத்துச்செல்வதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஜெய்சன்பிரவீன்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவிப்பட்டணத்தில் இருந்து வந்த காரை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு சூட்கேசில் 7 கிலோ 550 கிராம் தங்கக்கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.4 கோடியே 84 லட்சம் ஆகும். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

பின்னர் காரில் தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியை சேர்ந்த முகமது இர்பான் (வயது 27), அஜ்மல்கான் (25) ஆகிய 2 பேரையும் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இந்த தங்கக்கட்டிகளை இலங்கையில் இருந்து படகு மூலம் ஏஜெண்டுகள் கடத்தி வந்ததும், அவர்களிடம் இருந்து தங்கக்கட்டிகளை வாங்கி, சென்னையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் கொடுக்கச்சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து முகமதுஇர்பான், அஜ்மல்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களை திருச்சி ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சென்னையில் உள்ள அந்த நகை வியாபாரி யார்?, இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கக்கட்டிகளை கடத்தி வந்த ஏஜெண்டுகள் யார்? எப்படி கடத்தி வரப்பட்டது? இதற்கு யார் உதவுகிறார்கள்? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story