மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய சிவகங்கை.. கடையடைப்பு.. பந்த்.. ரெயில் மறியல் ..


மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய சிவகங்கை.. கடையடைப்பு.. பந்த்.. ரெயில் மறியல் ..
x
தினத்தந்தி 23 Sept 2023 9:47 AM IST (Updated: 23 Sept 2023 10:11 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் போதிய ரெயில்கள் நிற்காததால் மத்திய அரசை கண்டித்து கடை அடைப்பு மற்றும் பந்த் நடைபெற்று வருகின்றது.

சிவகங்கை,

சிவகங்கை ரெயில்நிலையத்தில் தற்போது மன்னார்குடி வரை செல்லும் ரெயில் மட்டுமே நிறுத்தப்படுகின்றது. இதன் வழியே செல்லும் செங்கோட்டை - தாம்பரம், வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரெயில்கள் மற்றும் வாராந்திர ரெயில்களான அயோத்தி,வாரணாசி,அச்மீர் போன்ற எந்த வித ரெயில்களும் இங்கு நிற்காமல் செல்லும். மேலும் சிவகங்கையில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரெயில்கள் இல்லை. எனவே மக்கள் ரெயில்கள் சிவகங்கையிலும் நின்று செல்லவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். சிவகங்கை மாவட்டம் உருவாகி 30 வருடங்கள் ஆனாலும் இந்த ரெயில் நிற்பது தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இதற்கு தீர்வு காண அனைத்து கட்சிகள்,வணிகர் சங்கங்கள் இணைந்து சிவகங்கையில் கடை அடைப்பு மற்றும் பந்த் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இவர்கள் சிவகங்கையில் அனைத்து ரெயில்களை நிறுத்தி செல்லவும்,ரெயில்நிலையத்தில் அடிப்படை வசதிகளான கழிப்பறைகள்,கேன்டீன் வசதிகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள்,ரிசர்வேசன் கவுன்ட்டர்,பார்சல் புக்கிங் போன்றவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

இந்நிலையில் காலை 9 மணிக்கு மேல் வரும் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி சுமார் 500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பந்த்தில் சிவகங்கையில் உள்ள 3000 க்கும் மேற்பட்ட கடைகள், பொதுநல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.


Next Story