சீனிவாசப்பெருமாள் கோவில் குடமுழுக்கு
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் உள்ள சீனிவாசப்பெருமாள் கோவில் குடமுழுக்கு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
திருவிடைமருதூர்:
கல்கருட பகவான்
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாசப்பெருமாள் கோவில் கி.பி.5-ம் நூற்றாண்டில் கோச்செங்கணான் என்னும் சோழ மன்னரால் கட்டப்பட்டது.. 108 திவ்ய தேசத்தில் 14-வது திவ்ய தேசமாகும்.
திருவேங்கடத் திருப்பதிக்கு இணையானது. இந்த தலத்தில் எழுந்தருளியிருக்கும் கல்கருட பகவான் மிகவும் பிரசித்தமானவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புடையது. திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.
இந்த கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை பிரம்மோற்சவத்தில் நான்காம் நாள் திருவிழாவாக நடைபெறும் வீதி உலா புறப்பாடு பிரசித்தி பெற்றது. இதில் நடக்கும் கல்கருட சேவையை தரிசிப்பது பெரும்பேறாகும். திருப்பதி வேங்கடமுடையான் சுவாமிக்கு இணையாக பாடப்பெற்ற சிறப்புடைய கோவிலாகும்.
குடமுழுக்கு
பல்வேறு சிறப்புகள் பெற்ற சீனிவாசப்பெருமாள் கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு யாக சாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 2-ம் காலம் யாக சாலை பூஜையும், மாலையில் 3-ம் காலம் யாகசாலை பூஜையும் நடந்தது.
இந்தயாக சாலை பூஜைகளை ஆகம பட்டாச்சாரியார் உ.வே.கண்ணன், கோனேரிராஜபுரம் உ.வே. சம்பத் பட்டாச்சாரியார், கோவில் அர்ச்சகர்கள் லட்சுமி நரசிம்ம பட்டாச்சாரியார், உ.வே.வாசுதேவ பட்டாச்சாரியார், உ.வே. கோபி பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர்.
அமைச்சர்-எம்.பி.க்கள் பங்கேற்பு
27-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் காலை 10.30 மணிக்குள் துலா லக்னத்தில் அஷ்டபந்தன குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவில் தமிழக அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை தக்கார் கோ. கிருஷ்ணகுமார், செயல் அலுவலர் பா. பிரபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.