சித்தராமையாவும், சிவக்குமாரும் 2024-ம் ஆண்டுக்குள் மோதி கொள்வது 100% நிச்சயம்; அண்ணாமலை பேச்சு
சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் வரும் 2024-ம் ஆண்டுக்குள் சண்டை போட்டு கொள்ளாவிட்டால் இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு தரவேண்டும் என அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னை,
சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் வரும் 2024-ம் ஆண்டுக்குள் சண்டை போட்டு கொள்ளாவிட்டால் இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு தரவேண்டும் என அண்ணாமலை பேசியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 13-ந்தேதி வெளிவந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. எனினும், ஆட்சி அமைப்பதற்கு ஒரு வார காலம் ஆகி விட்டது. முதல்-மந்திரியாக யாரை அறிவிப்பது என்பதில் நீண்ட இழுபறி ஏற்பட்டு பின்பு, சித்தராமையா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டார். துணை முதல்-மந்திரி பதவி டி.கே. சிவக்குமாருக்கு அளிக்கப்பட்டது.
இருவரும் இன்று பதவியேற்று கொண்டனர். இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக, பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டார்.
அவர் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பற்றி இன்று கூறும்போது, கர்நாடக அரசு இன்னும் ஓராண்டுக்குள் சீட்டு கட்டில் இருந்து சீட்டுகள் சரிவது போன்று கவிழும் என கூறினார்.
தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்த அவர், டி.கே. சிவக்குமாரும், சித்தராமையாவும் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் சண்டை போட்டு கொள்ளாவிட்டால், இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட வேண்டும். அவர்கள் இருவரும் மோதி கொள்வது 100% நிச்சயம். ஏனெனில் அமைப்பு அந்த அளவுக்கு தவறாக உள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.
கர்நாடக முதல்-மந்திரி வேட்பாளரை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவிக்காத நிலையில், வெற்றி பெற்ற பின்னர் முதல்-மந்திரியை அறிவிப்பதில் சுணக்கம் காட்டி வந்தது. கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டி, அதன் அறிக்கை கட்சி மேலிடத்திடம் அளிக்கப்பட்டது.
எனினும், சித்தராமையாவும், டி.கே. சிவக்குமாரும் டெல்லியில் முகாமிட்டு கட்சி தலைமையை சந்தித்து பேசினர். இதன்பின்னர் உடன்பாடு ஏற்பட்டு ஆட்சி அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி சித்தராமையா 2-வது முறை முதல்-மந்திரியாகி உள்ளார். டி.கே. சிவக்குமார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார்.