தஞ்சை புதிய பஸ் நிலைய வளாகத்தில் மதுஅருந்தும் இடமாக மாறிவரும் கடைகள்
தஞ்சை புதிய பஸ் நிலைய வளாகத்தில் மதுஅருந்தும் இடமாக மாறிவரும் கடைகள்
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மதுஅருந்தும் இடமாக மாறி வருகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே சென்று வரும் அவல நிலை காணப்படுகிறது.
புதிய பஸ் நிலையம்
தஞ்சையில் புதிய, பழைய பஸ் நிலையங்கள் உள்ளன. இதில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கும், சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையம் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் புதிய பஸ் நிலையம் தஞ்சையில் 1995-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது கட்டப்பட்டது ஆகும். இந்த பஸ் நிலையத்தில் ஒரு பகுதி வழியாக பஸ்கள் உள்ளே நுழைந்து, இன்னொரு பகுதி வழியாக பஸ்கள் வெளியே சென்று வருகின்றன. இந்த இரண்டுக்கும் மையப்பகுதியில் டவுன்பஸ்கள் வந்து செல்வதற்கான வழித்தடங்கள் உள்ளன. பின்பகுதியில் மருத்துவக்கல்லூரிக்கு செல்வதற்கான வழித்தடமும் உள்ளன.
புதிதாக கட்டப்பட்ட கடைகள்
இந்த பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், அதன் அருகே வணிக கடைகளும் கட்டப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்ட கடைகள் ஏலமிடப்பட்டு சில பயன்பாட்டில் இருந்து வருகின்றன. பெரும்பாலான கடைகள் மூடியே கிடக்கின்றன. அவ்வாறு மூடிக்கிடக்கும் கடைகள் முன்பு உள்ள நடைபாதையில் மதுஅருந்தும் இடமாக மாறி வருகின்றன.
இந்தபகுதியில் உள்ள கடைகளின் முன்பு இரவு 7 மணிக்குப்பிறகு ஏராளமானோர் அமர்ந்து மது குடித்த வண்ணம் உள்ளனர். இரவு 12 மணி வரை இந்த நிலை நீடிக்கிறது. மதுகுடித்து விட்டு பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் இருந்த கழிவுகளையே அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இரவு 10 மணிக்குப்பிறகு பார்த்தால் காலி மதுபான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.
பயணிகள் அச்சம்
தினமும் இதே நிலை தான் நீடிக்கிறது. காலை நேரத்தில் பாட்டில்களை பொருக்க வருபவர்கள் காலி மதுபான பாட்டில்கள், காலியாக கிடக்கும் வாட்டர் பாட்டில்களை எடுத்துச்சென்று விடுகின்றனர். மீதமுள்ளவற்றை அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். துப்புரவு பணியாளர்கள் தான் சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது.
தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். அதிலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்கள், வெளியூரில் இருந்து தஞ்சை வருபவர்கள் என ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் கடைகளின் முன்பு இவ்வாறு வரிசையாக அமர்ந்து கொண்டு மது குடிப்பதால் பயணிகளும் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சில நேரங்களில் மதுபிரியர்கள் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதுடன், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் செல்லும் பயணிகளும், பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பயணிகளும் காதுகளை மூடிக்கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் நாளுக்குள் நாள் இங்கு மதுபிரியர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டு தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.புதிய பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியில் 2 பகுதிகளிலும் உள்ள கடைகளின் முன்பும் இதே நிலை தான் நீடிக்கிறது. தொடர்ந்து மதுபிரியர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பஸ் நிலையத்திற்குள் பொதுமக்கள் செல்லவே அச்சப்படும் நிலை தான் ஏற்படும். எனவே மதுபிரியர்களின் அட்டகாசத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து, பொதுமக்கள் அச்சமின்றி பயணம் செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுஉள்ளனர்.