லெப்பைக்குடிகாடு பகுதியில் கடையடைப்பு போராட்டம்
லெப்பைக்குடிகாடு பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில், கீழக்குடிகாடு தடுப்பணை பகுதியில் வெள்ளாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் ெலப்பைக்குடிகாடு, பென்னகோணம், கீழக்குடிகாடு ஆகிய கிராமங்களில் குடிநீர், பாசனத்துக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில், கீழக்குடிகாடு கிராமத்தில் வெள்ளாற்றில் வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான ஆழ்துளை கிணறு அமைப்பதை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, ெலப்பைக்குடிகாடு பேரூராட்சியில் வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகள் அடைப்பு
இதையொட்டி அந்த பேரூராட்சி பகுதியில் உள்ள மருந்து கடைகள் மற்றும் பால் வினியோக கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. தேவையான பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.