பூந்தமல்லி அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
பூந்தமல்லி அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மழைநீர் கால்வாய் பணி முழுமையாக முடியாத நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் சாலையில் ஆங்காங்கே மழைநீர் கழிவுநீருடன் கலந்து நிற்கிறது. பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பாபாபீ தர்கா பகுதிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் மழை நீரோடு கழிவுநீர் கலந்து அதிக அளவில் தேங்கியுள்ளதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் தேங்கி நிற்கும் நீரில் மிதித்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.