புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் - போக்குவரத்து கடும் பாதிப்பு


புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் - போக்குவரத்து கடும் பாதிப்பு
x

புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னை

சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கே.எம்.கார்டன் சந்திப்பு அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கழிவுநீர் நிலையத்திற்கு செல்லும் கழிவுநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதில், கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வெளியேற தொடங்கிய கழிவுநீர் கே.எம்.கார்டன் 1-வது தெரு முதல் 5-வது தெரு மற்றும் கார்ப்பரேஷன் லேன் பகுதியில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கழிவுநீர் குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கழிவுநீர் வெளியேறுவதை தற்காலிகமாக தடுத்தனர்.

மேலும் ஆறாக ஓடிய கழிவுநீரை லாரிகள் மூலம் உறிஞ்சி அகற்றினர். இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது.

செங்குன்றம், மாதவரம், மூலக்கடை, வியாசர்பாடி, பகுதியில் இருந்து டவுட்டன், புரசைவாக்கம், சென்டிரல், பாரிமுனை, எழும்பூர் ஆகிய முக்கிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரு பக்கம் கழிவு நீர், மறுபக்கம் போக்குவரத்து நெரிசலால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையை மறித்து கட்டைகள், தடுப்புகள் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து போலீசாரும் புளியந்தோப்பு போலீசாரும் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். திரு.வி.க.நகர் 6-வது மண்டல கழிவுநீர் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை வேளையில் பரபரப்பாக இருக்கக்கூடிய பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஒரு பக்கம் கழிவுநீரால் நிரம்பியும் மறுபக்கம் வெறிச்சோடியும் காணப்பட்டது.


Next Story