சேஷசமுத்திரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்


சேஷசமுத்திரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2023 6:45 PM (Updated: 30 Sept 2023 6:46 PM)
t-max-icont-min-icon

13 ஆண்டுகளுக்கு பிறகு சேஷசமுத்திரத்தில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் காலனியில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தேர்திருவிழா நடைபெற்றது. அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு திருவிழா நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். இதற்காக புதிய தேர் செய்யப்பட்டது. இதையடுத்து கோவிலில் தேர்திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சக்தி அழைத்தல், ஊரணி பொங்கல், தேர் வெள்ளோட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேரோட்டம்

இதையடுத்து மாலை 4 மணிக்கு அலங்கரிங்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால், சேஷசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

1 More update

Next Story