சென்னையில் 2-வது ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கம்


சென்னையில் 2-வது ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கம்
x

சென்னையில் 2-வது ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கி இருக்கிறது. இதில் பூம்புகார் பட்டினத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தனர்.

மலர் கண்காட்சி

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பகுதிகளில் கோடை விடுமுறை காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அதேபோல், சென்னையிலும் மலர் கண்காட்சியை நடத்தும் புதிய முயற்சியை தோட்டக்கலைத் துறை கையில் எடுத்தது. அதன்படி, கடந்த ஆண்டு (2022) சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மலர் கண்காட்சி என்ற பெயரில் நடத்தியது. 3 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியை சென்னையை சேர்ந்தவர்கள் பலர் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

மலர் கண்காட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 2-வது ஆண்டாக சென்னையில் மலர் கண்காட்சியை நடத்த தோட்டக் கலைத் துறை முடிவு செய்தது. அதன்படி, இந்த ஆண்டு சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தால், அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தோட்டக்கலைத் துறை ஏற்கனவே அறிவித்தபடி மலர் கண்காட்சியை தொடங்கியது.

43 வகையான மலர்கள்

20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செம்மொழி பூங்காவின் நுழைவு வாயில் பகுதியை ஒட்டிய இடத்தில் இந்த மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மலர்கள் வாடிவிடாமல் இருக்க முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

சாமந்தி, துலிப், லில்லியம், ஆர்கிட், ஹெலிகொனியா, ஆல்ஸ்ட்ரோமேரியா, அந்துரியம், ஜெர்பிரா உள்பட 43 வகையான மலர்கள் கிருஷ்ணகிரி, ஓசூர், மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு வகையில் ஏராளமான மலர்கள் வீதம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மலர்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்று இருப்பதாக தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தா தேவி தெரிவித்தார்.

பூம்புகார் பட்டினம்

கண்காட்சியின் முத்தாய்ப்பாக, பூம்புகார் பட்டினத்தை அப்படியே கண் முன்னே காட்டும் விதமாக தத்ரூபமாக மலர்களால் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். காவிரி ஆறும், கடலும் சேருகின்ற இடத்தில் அமைந்திருந்த இந்த பூம்புகார் பட்டினத்தில் உள்ள மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி ஆகிய பகுதிகளின் நிகழ்வுகளை எடுத்துக் கூறும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, சிலம்பு, தேர், முரசு, யானைகளை கொண்டு போர் அடித்தல், மாட மாளிகை, தோரண வாயல், கூலவீதி, நெசவு, மீனவர்கள், காதல், வீரம், ஒற்றுமை கலந்த சித்திரை விழா ஆகியவற்றை பூக்கள், காய்கறி, பழங்கள், நவதானியங்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றை கொண்டு சித்தரித்துள்ளனர். நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. கண்காட்சியை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. tnhorticulture.com என்ற தோட்டக்கலைத் துறை இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.


Next Story