மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் தங்கம் வென்ற சிறுவனுக்கு சீமான் வாழ்த்து!
ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற சிறுவனுக்கு சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அச்சிறுவனுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகு பந்து போட்டியில் தங்கம் வென்றுள்ள அன்புமகன் பாலசுப்பிரமணியமுக்கு அன்பும், பாராட்டுகளும்!
புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தம்பி இராஜ்குமாரின் மகன் பாலசுப்பிரமணியம், ஜெர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்'
எனும் தமிழ்மறையோன் நமது பெரும்பாட்டன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தன் நிலை கண்டு துவண்டு, சோர்ந்து விடாமல், தொடர்ச்சியாக முயன்று, தனக்குக் கிடைக்கப்பெற்ற மிகச்சொற்ப வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமது அயராத முயற்சியினாலும், அபாரத் திறமையினாலும் உலக அரங்கில் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்துள்ள அன்புமகன் பாலசுப்பிரமணியமுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடுமையான உழைப்பும், தளராத மன ஊக்கமும் இருந்தால் எத்தகைய சூழலிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, இளந்தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அன்புமகன் பாலசுப்பிரமணியம் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது உள்ளம் கனிந்த புரட்சி வாழ்த்துகள்!" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.