விதைகளை காய வைத்து சேமிக்க வேண்டும்


விதைகளை காய வைத்து சேமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூச்சி தாக்குதலை தவிர்க்க விதைகளை காய வைத்து சேமிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

நீலகிரி

நீலகிரி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் நிர்மலா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தரமான விதைகளை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அதே அளவிற்கு விதைகளை பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சேமித்து வைக்கப்படும் விதைகளில் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக இருந்தால் உதாரணமாக கேரட் விதைக்கு 8 சதவீதம், பீட்ரூட் 9 சதவீதம், முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் 7 சதவீதம், முள்ளங்கி 6 சதவீதம், பீன்ஸ், பட்டாணி 9 சதவீதத்துக்கு மேல் இருந்தால் எளிதில் பூச்சி நோய் தாக்குதலுக்கு ஆளாகும்.இதனால் விதைகளின் முளைப்பு திறனும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, விதைகளை சேமிக்க புதிய கோணிப்பைகள் அல்லது சுத்தமான தீவன சாக்குகளை பயன்படுத்த வேண்டும். ஈரப்பதத்தை அந்தந்த விதைகளின் தன்மைக்கு தகுந்தாற்போன்று, நீலகிரி மாவட்டத்தில் பயிரிடும் காய்கறிகளுக்கு 6 முதல் 9 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு காய வைத்து சேமிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை விதை மூட்டைகளில் பூச்சி தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். முளைப்பு திறன் குறித்து கூடுதல் விவரங்கள் பெற ஊட்டி ரோஜா பூங்கா, தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை அணுகலாம். பகுப்பாய்வு கட்டணமாக ரூ.80 செலுத்தி விதை மாதிரிகளை கொடுத்து ஆய்வு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story