போலி வாக்காளர் அட்டை தயாரித்த இ சேவை மையத்துக்கு சீல்


போலி வாக்காளர் அட்டை தயாரித்த இ சேவை மையத்துக்கு சீல்
x

திண்டிவனத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த இ-சேவை மையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பாக அதன் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்

விழுப்புரம்

திண்டிவனம்

போலி வாக்காளர் அட்டை

திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 57). இவர் தனது வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக திண்டிவனம் தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரது வாக்காளர் அடையாள அட்டையை வாங்கி பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அது போலி வாக்காளர் அடையாள அட்டை ஆகும்.

இது குறித்து செல்வராஜிடம் நடத்திய விசாரணையில், திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ராகவேந்திரா பிரிண்டர்ஸ் என்ற தனியார் இ-சேவை மையத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றதாக தெரிவித்தார்.

இ-சேவை மையத்துக்கு 'சீல்'

இதையடுத்து திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இ-சேவை மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு வாக்காளர் அடையாள அட்டை போலியாக தயாரித்து வினியோகம் செய்தது தெரியவந்தது. செல்வராஜிக்கு கொடுத்ததுபோல் ரெட்டணை கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் வாக்காளர் அட்டையை போலியாக தயாரித்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சப்-கலெக்டர் அமித், இ-சேவை மையத்துக்கு 'சீல்' வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் இ-சேவை மையத்தில் இருந்த 3 கம்ப்யூட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வலைவீச்சு

இது குறித்து திண்டிவனம் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் இ-சேவை மையத்தின் நிர்வாகி கமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்(52) என்பவர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுரேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் அமித் கூறுகையில், தவறு செய்தவர்கள் மீது ஜாமீனில் வெளிவராத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் திண்டிவனம் பகுதியில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களையும் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.


Next Story