ஆதிதிராவிட நல பள்ளிகளுக்கான சாரண பயிற்சி முகாம்
பெரம்பலூரில் ஆதிதிராவிட நல பள்ளிகளுக்கான சாரண பயிற்சி முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண-சாரணியர் இயக்கம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் பெரம்பலூர் மாவட்ட பயிற்சி மையத்தில் நடைபெற்றது. முகாமில் 10 அரசு ஆதிதிராவிட உயர்நிலை மேல்நிலை பள்ளிகளை சார்ந்த 320 சாரண- சாரணியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முகாமிற்கு விருத்தாசலம் கல்வி மாவட்ட சாரண செயலாளர் வீரப்பா தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட பயிற்சி ஆணையர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். உதவி முகாம் தலைவர் வேணுகோபால், சாரண ஆசிரியர் அருண்குமார், ஜான்சிராணி ஆகியோர் சாரண-சாரணியர்களுக்கு இயக்க வரலாறு, கொடி பாடல், முதலுதவி, கயிற்று கலை, கூடாரம் அமைத்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சரவணன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.