சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை


சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை
x

அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை முதல் வாட்டி வதைக்க தயாராக உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், சில இடங்களில் இயல்பைவிட 9 டிகிரி வரை வெப்ப அளவு கூடும் என்றும், இதனால் நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக வட உள் மாவட்டங்களில்தான் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

ஈரோடு, சேலம், கரூரில் தாங்க முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக கரூரில் 111 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி இருந்தது.

அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை (சனிக்கிழமை) முதல் வாட்டி வதைக்க தயாராக உள்ளது. 25 நாட்கள் இதன் தாக்கத்தை நாம் பல இடங்களில் உணர முடியும். அதாவது, 28-ந்தேதி வரை கத்தரி வெயில் நீடிக்க உள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை

கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே 110 டிகிரி வெயில் அளவு கடந்துவிட்டது. வழக்கமாக, கத்தரி வெயில் காலத்தில்தான் இந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே சூரியன் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இன்னும் கத்தரி வெயில் காலத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை எதிர்கொள்ளப் போகிறோம்? என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது.

இதற்கு ஏற்றாற்போல், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் அனேக இடங்களில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) வெப்ப அலை வீசுவதோடு, வெயில் சுட்டெரிக்கும் எனவும், இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப அளவு கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. வெயில் சுட்டெரிக்கும் என்பதால், இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர உள் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று முதல் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு அதிகரிக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.


Next Story