காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு


காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
x

காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

திருநெல்வேலி

பள்ளிகள் திறப்பு

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை பல்வேறு கட்டங்களாக விடப்பட்டது. கடந்த 23-ந்தேதி ஒரு சில பள்ளிகளுக்கு விடப்பட்டன.

27-ந்தேதி முதல் மேலும் சில பள்ளிகள் மூடப்பட்டன. மிலாடி நபி, காந்தி ஜெயந்தி விடுமுறையை மையமாக வைத்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டன.

காலாண்டு விடுமுறை நேற்று முன்தினத்துடன் முடிந்தது. நேற்று அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.

தனியார் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேற்று வகுப்புகள் தொடங்கியது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 8-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் நேற்று திறக்கப்பட்டன நேற்று இரண்டாம் பருவ பாடங்களை கற்றுக் கொடுக்கும் பணியை ஆசிரியர்கள் தொடங்கி விட்டார்கள். இதற்காக புத்தகங்கள் நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

நெல்லை மீனாட்சிபுரம் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மேரிமார்க்ரெட் மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்திற்கு உரிய பாட புத்தகங்களை வழங்கினார். இதேபோல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நேற்று இரண்டாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.


Next Story