திருத்தணியில் பஸ்சில் பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம்; கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை
திருத்தணியில் மாணவர்கள் நலன் கருதி, போக்குவரத்து நிர்வாகம் காலை, மாலை நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணியில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் கலைக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் வசதிக்காக திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், தடம் எண் 83 என்ற அரசு பஸ் திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்து கன்னிகாபுரம், பி.சி.என்.கண்டிகை, பெரியகடம்பூர், குருவராஜபேட்டை வழியாக மேட்டுக்குன்னத்தூர் வரை சென்று வருகிறது.
பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களில் மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால், மாணவர்கள் ஆபத்தான நிலையில், படியில் தொங்கியவாறும், மேற்கூரையின் மீது ஏறிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுகுன்னத்தூர் நோக்கி புறப்பட்ட பஸ்சில் போதிய இட வசதி இல்லாததால் மாணவிகள் படியில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். எனவே மாணவர்கள் நலன் கருதி, போக்குவரத்து நிர்வாகம் காலை, மாலை நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.