சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சாலை மறியல்


சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சாலை மறியல்
x

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

சாலை மறியல் போராட்டம்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களும், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட தலைவருமான இளங்கோவன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான சரஸ்வதி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட செயலாளர் பால்சாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லப்பிள்ளை வாழ்த்துரை வழங்கினார். சாலை மறியல் போராட்டத்தை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பாலக்கரை ரவுண்டானா அருகே இருந்து சாலைக்கு ஓடிச்சென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த சிறப்பு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலை கைவிடவில்லையென்றால் கைது செய்வோம் என்றனர்.

ஆனாலும் அவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 51 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். கைதானவர்கள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பு சார்பில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி திருச்சியில் வாழ்வா? சாவா? போராட்ட பிரகடன மாநில மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story