விசைத்தறி கூடங்களில் தேங்கி கிடக்கும் சேலைகள்


அருப்புக்கோட்டையில் விசைத்தறி கூடங்களில் சேலைகள் தேங்கி கிடக்கின்றன.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

நலிந்து வரும் நெசவுத்தொழிலினால் அருப்புக்கோட்டையில் விசைத்தறி சேலைகள் தேங்கி கிடக்கின்றன.

நெசவுத்தொழில்

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கட்டங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் நெசவுத்தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

இந்த நெசவு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்கு பெரும்பாலும் சேலை ரகங்களே உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விலை ஏற்றம்

தற்போது நெசவு சேலையை அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நூல் விலை ஏற்றத்தால் இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகள் வழக்கமாக வாங்கும் சேைலயின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து விட்டனர். ஆதலால் நெசவாளர்கள் தொடர்ந்து பணி செய்யாமல் விசைத்தறிகள் முடங்கியுள்ளன.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதுகுறித்து பாளையம்பட்டி எம்.எஸ்.ஆர் காலனியை சேர்ந்த நெசவாளர் நாராயணன் கூறியதாவது:-

நாங்கள் காலங்காலமாக நெசவுத்தொழில் செய்து வருகிறோம். தற்போது விசைத்தறியில் சேலை ரகங்கள் நெய்து வருகிறோம். விசைத்தறியில் நெய்த சேலைகளை உடுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் முன்பு போல் சேலையை யாரும் விரும்பி வாங்கி செல்வதில்லை. இதனால் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

நாள் ஒன்றுக்கு 4 சேலைகள் நெய்து வந்த நிலையில் தற்போது 2 சேலைகள் மட்டுமே நெய்து வருகிறோம். இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.

நலிவடைந்து வருகிறது

நெசவாளர் மீனா கூறுகையில்:-

எங்களுக்கு நெசவுத்தொழிலை விட்டால் மாற்று தொழில் தெரியாது. நெசவுத்தொழில் தற்போது மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது. இந்த தொழிலை நம்பி தான் நாங்கள் குடும்பம் நடத்துகிறோம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். மொத்தத்தில் எங்களின் உயிர்நாடி நெசவுத்தொழில் ஆகும்.

இந்த தொழில் தற்போது பல்வேறு காரணங்கள் நலிவடைந்து வருகிறது. ஆதலால் நெசவுத்தொழிலை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வட மாநில சேலைகள்

உற்பத்தியாளர் இளங்கோ:-

அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திராவிற்கு அதிகமான சேலைகள் இங்கிருந்து அனுப்பப்படுகிறது. நூல் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகளுக்கு போட்டியாக வட மாநிலங்களில் இருந்து மிக குறைவான விலைக்கு சேலைகள் அனுப்பப்படுகின்றன. அந்த விலைக்கு இணையாக நாங்கள் தயாரிக்கும் சேலைகள் வழங்க முடியவில்லை. ஆதலால் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாநில அளவில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி நலிந்து வரும் நெசவுத் தொழிலை மீட்டெடுக்க தேவையான உதவிகள் செய்ய வேண்டும். அப்போது தான் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



Related Tags :
Next Story