நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2023 1:30 AM IST (Updated: 4 Oct 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் பணி வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி நகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த சம்பளம் வழங்கவும், பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த பி.எப். தொகையை நிர்வாக பங்களிப்புடன் செலுத்த வேண்டும் என்பது குறித்து மாவட்ட, நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.


இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கார் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு, பேச்சுவார்த்தையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் பணி நீக்கம் செய்யப்பட்டதில் 38 பேருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கவில்லை. எனவே மீண்டும் பணி வழங்கும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story