தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x

வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள்

வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள் தோறும் தூய்மை பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். அதைத்தவிர கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல், சாலை, தெருக்களில் உள்ள குப்பைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 900 தூய்மை பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.538 வழங்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஒப்பந்ததாரர் கூலியை உயர்த்தி வழங்காமல் ரூ.430-ல் வருங்கால வைப்புநிதி, தொழிலாளர் மருத்துவ காப்பீடு தொகை பிடித்தம் போக ரூ.350 மட்டும் வழங்கியதாகவும், மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கவில்லை என்றும், வருங்கால வைப்புநிதி தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

வேலைநிறுத்த போராட்டம்

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீரென திரண்டனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பணிகளை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மேயர் சுஜாதா, துணை கமிஷனர் சசிகலா மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது தினக்கூலி ரூ.538 அடிப்படையில் ஊதியத்தை மாதந்தோறும் 10-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். வருங்கால வைப்புநிதியை உடனடியாக கணக்கில் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

விரைவில் தீர்வு...

அதற்கு மேயர் சுஜாதா கூறுகையில், தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்குவதற்கு விரைவில் தீர்வு காணப்படும். தற்போது தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story