மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்


மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு  5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
x
தினத்தந்தி 25 April 2024 10:32 AM IST (Updated: 25 April 2024 12:59 PM IST)
t-max-icont-min-icon

மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று நேரில் ஆஜராகினர்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத் துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

இதை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு சம்மனுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில், 5 மாவட்ட கலெக்டர்களும் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜராகினர்.


Next Story