நாமக்கல் மாவட்டம் முழுவதும்29 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்


நாமக்கல் மாவட்டம் முழுவதும்29 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:30 AM IST (Updated: 8 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 29 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

29 ஏரிகளில் அனுமதி

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கண்ணூர்பட்டி ஏரி, கதிராநல்லூர் ஏரி, எடையப்பட்டி ஏரி, ஏளூர் ஏரி, சர்க்கார் நாட்டாமங்கலம் ஏரி, திப்ரமாதேவி ஏரி, செவ்விந்திப்பட்டி ஏரி, செல்லிபாளையம் ஏரி, கருப்பன்பட்டி ஏரி, எருமப்பட்டி பெரிய ஏரி, பாப்பன்குளம் ஏரி, கஸ்தூரிப்பட்டி ஏரி, பவித்திரம் ஏரி, காக்காவேரி ஏரி, அன்னமார் ஏரி, வடுகம் ஏரி, தொப்பப்பட்டி ஏரி, சீராப்பள்ளி ஏரி, புத்தூர் ஏரி, சர்க்கார் வாழவந்தி ஏரி, ஆண்டாபுரம் ஏரி, அரூர் ஏரி, செட்டிகுளம் ஏரி, புதுக்குளம் ஏரி, துத்திக்குளம் ஏரி, வருதன் குட்டை, தொட்டியப்பட்டி சின்ன ஏரி, மரூர்பட்டி பெரிய ஏரி மற்றும் வீசாணம் பெரிய ஏரி ஆகிய 29 ஏரிகளின் கண்மாய்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கடந்த 4 மாதங்களாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டிருந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான விவசாயிகளுக்கு செல்லிபாளையம் ஏரி, செவ்விந்திப்பட்டி ஏரி, புத்தூர் ஏரி, திப்ரமாதேவி ஏரி, சீராப்பள்ளி ஏரி, ஏளுர் ஏரி, பவித்திரம் ஏரி, எஸ்.நாட்டாமங்கலம் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தற்பொழுது பருவமழை தொடங்க உள்ளதால், மேற்படி ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையுடன் தாங்கள் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ள ஏரியின் கட்டுப்பாட்டு அலுவலரான நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு வண்டல் மண் எடுத்து கொள்ளலாம்.

மேலும், மேற்படி ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தினை கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழுடன் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story