முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் மணமக்கள் சாமி தரிசனம்


முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் மணமக்கள் சாமி தரிசனம்
x

திருத்தணி முருகன் கோவிலில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு 100 மேற்பட்ட மணமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி சுப்ரமணிய சாமி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்தால் சிறப்பு என்பதால் முகூர்த்த நாட்களில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறும். சாதாரண முகூர்த்த நாளில் கூட சராசரி 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கும். முகூர்த்த நாட்களில் திருத்தணி கோவில் மற்றும் தனியார் மண்டபங்கள் நிரம்பி வழியும்.

இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் மலை மீது உள்ள முருகன் கோவில் மண்டபத்திலும், அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபங்களில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. நேற்று மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில் மட்டும் 36 திருமணங்கள் நடைப்பெற்றது. திருத்தணி நகரத்தில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் 70-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைப்பெற்றது.

திருத்தணி முருகன் கோவிலில் மற்றும் தனியார் மண்டபங்களில் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சீபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜோடிகள் திருமணம் செய்வதற்காக தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர்.

மேலும் முருகனை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 100 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் திருத்தணி முருகன் கோவில் வளாகம் முழுவதும் புதுமண தம்பதிகளாலும், அவர்களது உறவினர்களாலும் நிரம்பி காணப்பட்டது. இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


Next Story