சம்பா சாகுபடி பணி தீவிரம்
கும்பகோணம் பகுதியில் சம்பா சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கும்பகோணம்:
சம்பா சாகுபடி
வேளாண் துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் பொறியியல் துறையின் கீழ் அரசு வேளாண் எந்திரங்களை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வாடகைக்கு வழங்கி வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கும்பகோணம் பகுதியில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. வயலில் உழவு அடித்தல், நாற்றங்கால் தயார் செய்யும் பணி, நடவு வயல் தயார் செய்யும் பணி , ரோட்டேவேட்டர் எந்திரம் மூலம் நடவுக்கு முன்பு வயலை சமன்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசின் வேளாண் பொறியியல் துறை எந்திரங்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன.
வேளாண் எந்திரங்கள்
கும்பகோணம் அருகே உள்ள ஆலையடி பட்டணம் பகுதியில் வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான டிராக்டர் மூலம் வயலை சமன்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் சம்பா மற்றும் தாளடி நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக வேளாண் துறைக்கு சொந்தமான எந்திரங்களை வேளாண் துறையினால் செல்போனில் நிறுவப்பட்டுள்ள உழவன் செயலி மூலம் நாங்கள் முன்பதிவு செய்து வருகிறோம்.
உழவன் செயலி
இந்த உழவன் செயலியில் முன்பதிவு செய்து உள்ளவர்களின் வரிசைப்படி வேளாண் எந்திரங்களை குறைந்தபட்ச வாடகையில் அளித்து வருகிறது. இதனால் நடவுப் பணிகளுக்கு அதிகபட்ச செலவுகள் செய்ய வேண்டியது இல்லை. அதுமட்டுமல்லாமல் தனியார் எந்திரங்கள் மிகுந்த தட்டுப்பாடாக உள்ள இந்த நிலையில் அரசின் இந்த டிராக்டர் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் சமன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகள் மூலம் ஒரே நாளில் 10 ஏக்கர் நடவு பணிகளை நாங்கள் மேற்கொள்ள முடியும். எனவே விவசாயிகள் இந்த உழவன் செயலியை முழுமையாக பயன்படுத்தி அரசு அளித்துள்ள வேளாண் எந்திரங்களை தேவைக்கேற்றபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.