தமிழில் 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!


தமிழில் நீர்வழிப் படூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!
x
தினத்தந்தி 20 Dec 2023 4:00 PM IST (Updated: 20 Dec 2023 4:36 PM IST)
t-max-icont-min-icon

24 மொழிகளில் சிறந்த புத்தகங்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

மத்திய அரசு ஆண்டுதோறும் எழுத்தாளர்களை கவுரவிக்கும் வண்ணம் 'சாகித்ய அகாடமி' விருதினை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகங்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 24 மொழிகளில் வெளிவந்த புத்தகங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழில் 'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த இவரின் இயற்பெயர் ராஜசேகரன். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். அதன்பின் முழு நேர எழுத்தாளராக மாறி கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இவருடைய மூன்றாம் நாவல்தான் 'நீர்வழிப் படூஉம்'. இந்நாவல், ஏழை மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் கொள்ளும் உறவையும் பற்றி பேசும் நாவலாகும்.

எளிய மனிதர்களின் வாழ்வியலையும், வாழ்வின் யதார்த்தத்தையும் அதன் தன்மை மாறாமல் பிரதிபலிப்பதில் கைதேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதி. அவருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன.


Next Story