கிராமிய அஞ்சலக ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்


தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM (Updated: 4 Oct 2023 6:45 PM)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் நேற்று (புதன்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

கோரிக்கைகள்

ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி, பென்ஷன் உள்ளிட்ட இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிதாக பணியில் சேர்ந்திடும் ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும். பகுதிநேரம் பணியாற்றும் வெளி ஆட்களை, காலி பணியிடங்களில் ஒன் டைம் மெஷர்-ரில் நிரப்ப வேண்டும்.

பணியின் போது உயிரிழந்த கிராம அஞ்சல் ஊழியர்களின் வாரிசுகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஹரிஷ், பொருளாளர் எஸ்.பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சீர்காழி

இதேபோல் சீர்காழியில் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் நேற்று (புதன்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் எருக்கூர் தாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் பொருளாளர் நாகராஜன், துணைச் செயலாளர்கள் பழனியப்பன், சுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகிலா கமிட்டி பொருளாளர் ராஜஸ்ரீ வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில உதவி செயலாளர் மருதசாமி, கோட்ட செயலாளர் ஊமைத்துறை, அமைப்புச் செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். அப்போது டார்கெட் டார்ச்சர் கைவிட வேண்டும். கிளை அஞ்சலகங்களுக்கு லேப்டாப் பிரிண்டர் வழங்க வேண்டும். பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் டி.ஏ உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பக்திநாதன், கே. ரவிச்சந்திரன், கண்ணன், பி. ரவிச்சந்திரன் மகிலா கமிட்டி செயலாளர் அபிநயா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற பணி புறக்கணிப்பு போராட்டதால் கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையப் பணி பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.வேலை நிறுத்தம் காரணமாக மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள 155 கிராமிய அஞ்சலகங்கள் நேற்று இயங்கவில்லை.


Next Story