ஓட, ஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை


ஓட, ஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை
x

பழனி பஸ்நிலையம் அருகே, பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நேரில் பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திண்டுக்கல்

வெட்டிக்கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் குரும்பப்பட்டியை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகன் வடிவேல் (வயது 27). கூலித்தொழிலாளி. நேற்று மதியம் இவர் பழனி பஸ்நிலையம் அருகே சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வடிவேலுவை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வடிவேலுவை வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல், அவர்களிடம் இருந்து தப்பி உயிர் பிழைக்க ஓடினார். இருப்பினும் அவர்கள் அவரை ஓட, ஓட விரட்டி சென்று வெட்டினர்.

இதில் வடிவேலுவின் கால், தலை, முதுகில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் நிலைகுலைந்து போன வடிவேல், கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பக்தர்கள் ஓட்டம்

பழனி பஸ்நிலையம் அருகே பட்டப்பகலில், கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது. ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் வடிவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரணம் என்ன?

கொலை செய்யப்பட்ட வடிவேல் மீது கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரது எதிரிகள் வடிவேலை தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பழனி பஸ்நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் குற்ற சம்பவங்கள்

பழனி பகுதியில் கடந்த சில நாட்களாகவே கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு டாக்டரை தாக்கி நகை-பணம் கொள்ளை போனது. திருநகரில் வீட்டுக்கு முன்பு நின்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்தசூழ்நிலையில் வடிவேல் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற குற்ற சம்பவங்கள் பழனி பகுதியில் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே குற்றங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story