ஆவினின் ஹலால் நெய்யை கோவில்களுக்கு வழங்குவதாக வதந்தி - தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்


ஆவினின் ஹலால் நெய்யை கோவில்களுக்கு வழங்குவதாக வதந்தி - தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்
x

தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடம்பெறாது என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் அதிக அளவில் கலப்படம் செய்திருப்பதாகவும், விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி சமீபத்தில் பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, 'ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு, திருப்பதி லட்டு பிரசாதத்திலும் முறைகேடு செய்துள்ளது.

அந்த ஆட்சியில் வழங்கப்பட்ட லட்டுவில், நெய்யில் கலப்படம் செய்ததோடு மட்டுமல்லாமல், விலங்கு கொழுப்பையும் சேர்த்துள்ளனர்' என குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசியலிலும் கடும் புயலை கிளப்பியிருக்கிறது. அரசியல் ஆதாயங்களுக்காக இந்த கொடூரமான குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு சுமத்துவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. இதற்காக ஆய்வக அறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பரப்புவதாகவும் கூறி உள்ளது.

இதைத் தொடர்ந்து பழனி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக வதந்தி பரவியது. இதற்கு பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்துதான் பெறப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் தற்போது ஆவினின் ஹலால் நெய்யை கோவில்களுக்கு வழங்குவதாக வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த ஹலால் நெய்யை தான் ஆவின் கோவில்களுக்கும் விற்பனை செய்கிறது' என்று கூறி ஆவினின் சமையல் பட்டர் பாக்கெட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

இது முற்றிலும் வதந்தியே. ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் 15-க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே ஹலால் முத்திரை இடம்பெறும். தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடம்பெறாது. இப்புகைப்படத்தை வைத்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்தி பரப்பி வருகின்றனர்" என்று விளக்கமளித்துள்ளது.


Next Story