பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பொங்கல் ரொக்கத் தொகையை தமிழக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மொத்தம் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ரூ.1,000 ரொக்கத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏழை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022-ஆம் ஆண்டு தவிர கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் ரொக்கத் தொகையை தமிழக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது!
பொங்கல் ரொக்கப் பரிசை நிறுத்துவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாகவே பொங்கல் பரிசாக சராசரியாக ஆண்டுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை வழக்கத்தை விட உயர்த்திதான் வழங்க வேண்டுமே தவிர நிறுத்தக் கூடாது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரூ.1,000 வழங்கப்படவில்லை. ஆனாலும் அந்த ஆண்டில் வெல்லம், நெய், முந்திரிப் பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அவற்றை வழங்குவதில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றைத் தவிர்ப்பதற்காகவே கடந்த ஆண்டில் வெல்லம்,நெய் உள்ளிட்ட பொருட்களை வழங்காமல் அவற்றை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ள வசதியாக ரூ.1,000 வழங்கப்பட்டது. அதை இப்போது நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டில் ஏழை, பணக்காரர் வேறுபாடு இல்லாமல் அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதுதான் பொங்கல் பரிசு வழங்கப்படுவதன் நோக்கம். எந்தக் காரணமும் இல்லாமல் நடப்பாண்டில் பொங்கல் ரொக்கப்பரிசு நிறுத்தப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தமிழர் திருநாளை எவ்வாறு கொண்டாட முடியும்? பொங்கல் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா?
தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, சென்னை புறநகர் மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 உதவித் தொகையை வழங்குவதில் ஏராளமான குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன. குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1,000 மாத உரிமைத் தொகையும் தகுதியான பலருக்கு வழங்கப்படவில்லை. அதனால், பொதுமக்கள் மத்தியில் கடுமையாக மனக்குறை நிலவி வரும் சூழலில், பொங்கல் ரொக்கப்பரிசு வழங்கப்படாதது மக்களின் மனக்குறையை கோபமாக மாற்றி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.
எனவே, பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தபட்சமாக ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும். அத்துடன், முழுக் கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை ரூ.33 போதுமானதல்ல. அது அவர்களின் உற்பத்திச் செலவைக்கூட ஈடு செய்யாது. எனவே, செங்கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.