விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்க ரூ.94½ கோடி கடன் அனுமதி - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்


விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்க ரூ.94½ கோடி கடன் அனுமதி - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
x

கோப்புப்படம் 

விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்க ரூ.94½ கோடி வழிவகைக் கடன் அனுமதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2023-24 அரவைப் பருவத்தில் கடந்த மாதம் (ஜூன்) 15-ந் தேதி வரை 30.82 லட்சம் டன் கரும்பை அரவை செய்து, 8.92 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 2.75 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது.

கடந்த 2020-21 அரவைப் பருவம் முதல் 2022-23 அரவைப் பருவம் வரை கரும்பு நிலுவைத் தொகை வழங்கவும், ஆலைகளின் நடைமுறை மூலதனத்திற்காகவும் தமிழ்நாடு அரசு ரூ.600.37 கோடி வழிவகைக் கடனாக அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளால் நடப்பு 2023-24 அரவைப் பருவத்திற்கு வழங்க வேண்டிய ரூ.920.99 கோடியில் கடந்த ஜூன் 15-ந்தேதி வரை ரூ.835.73 கோடி வழங்கப்பட்டு நிலுவையாக ரூ.85.26 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் கரும்பு பணம் விவசாயிகளுக்கு நிலுவையின்றி வழங்கவும் ஆலைகளின் நடைமுறை மூலதன செலவிற்காகவும் ரூ.94.49 கோடி வழிவகைக் கடன் அனுமதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story