அடகு நகையை திருப்ப வந்த விவசாயியிடம் ரூ.74 ஆயிரம் வழிப்பறி


அடகு நகையை திருப்ப வந்த விவசாயியிடம் ரூ.74 ஆயிரம் வழிப்பறி
x

கீரனூரில் அடகு நகையை திருப்ப வந்த விவசாயியிடம் ரூ.74 ஆயிரத்தை வழிப்பறி செய்த திருப்பூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணத்துடன் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

அடகு வைத்த நகைகள்

கீரனூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகையா (வயது 66), விவசாயி. இவர் வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் வைத்திருந்தார். இதில் 64 ஆயிரத்துக்கு அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை திருப்பி உள்ளார். மீதியுள்ள ரூ.74 ஆயிரத்தை மஞ்சப்பையில் வைத்திருந்தார்.

பின்னர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்றிருந்த சிலரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் ஒரு வாலிபர், முருகையா அருகே சில ரூபாய் நோட்டுகளை போட்டு பணம் கீழே கிடப்பதாக கூறியுள்ளான். அவர் பணம் என்னுடைய இல்லை என கூறியுள்ளார்.

போலீசில் ஒப்படைப்பு

இந்தநிலையில் சற்றும் எதிர்பாராத நேரத்தில் முருகையா கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளான். ஆனால் முருகையா அந்த பணப்பையை இருக பிடித்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் முருகையாவிடம் இருந்து பணப்பையை பிடுங்கி தன்னுடன் வந்த மற்றொரு வாலிபரிடம் கொடுத்துவிட்டு அருகேயுள்ள தெருவில் தப்பி ஓடினான். மற்றொரு வாலிபர் பணப்பையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை விரட்டி பிடித்து கீரனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

கைது

விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் ராமு (26) என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியது ராகவன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். மேலும் பணத்துடன் தப்பி ஓடிய ராகவனை வலைவீசி தேடி வருகிறார்கள். கீரனூரில் பட்டப்பகலில் அடகு நகையை திருப்ப வந்த விவசாயியிடம் ரூ.74 ஆயிரத்தை வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story