ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள் ஆசிரியர்களுக்கு இலவச கையடக்க கணினி, மருத்துவ பரிசோதனை, சுற்றுலா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ரூ.225 கோடியில் ஆசிரியர் நலன்களுக்கு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதில் இலவச கையடக்க கணினி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடத்தில் மதிப்பீட்டு மையம், முன்னோட்ட காட்சி அரங்கம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 14,417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையமும் விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட்டு உள்ள வெளியீட்டுப்பிரிவு புத்தக விற்பனை மையத்தை திறந்து வைத்ததோடு, அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியீட்டு பிரிவு புத்தகங்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, தயாநிதி மாறன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னோட்ட காட்சி அரங்கை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் பேசினார். இதனை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமர்ந்து பார்த்தனர். காணொலியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கென 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' தொடங்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் மாணவர்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் தாங்கள் பயின்ற அரசுப் பள்ளிகளுக்கு உதவ இதனால் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய கட்டமைப்புகளும், கல்வி சார்ந்த புதிய திட்டங்களும் அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவுகள்.
இடைநிற்றல் மாணவர்களை கண்டறிவதும், அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து படிக்கச் செய்வதும், பொதுத் தேர்வில் தேறிய பிறகும் உயர்கல்வி பெறமுடியாமல் போன மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மேலும் மேலும் படிக்கச் செய்யும் நோக்கத்துடன் செயல்படுவதும் ஆசிரியப் பெருமக்களே.
அரசின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் தருபவர்கள் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்களின் அளப்பரிய பணி இல்லையெனில், இத்தகைய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆசிரியர்களின் முக்கியத்துவம் எந்த அளவுக்கு என்றால், அம்மா-அப்பாவுக்கு அடுத்த இடத்தில் கல்வி கற்றுத்தர ஆசிரியர்களான உங்களைத்தான் நம் சமூகம் வைத்திருக்கிறது.
அப்படிப்பட்ட ஆசிரியர்களை ஊக்கப்படுத்த, வாசிப்புத்திறனை மேம்படுத்த, படைப்பாற்றலை வளர்க்க 'கனவு ஆசிரியர்' என்ற மாத இதழ் வெளி வருகிறது. மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும், ஆசிரியர்கள் நலனை காக்கவும் புதிய திட்டங்களை இந்தக் காணொலி மூலம் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
* மாறி வரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றி கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்படும்.
* மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்களின் உடல்நலம் காக்க, அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
* உயர்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்.
* அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.
இந்த திட்டங்கள் சுமார் ரூ.225 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்த காணொலி மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெரும் மகிழ்ச்சி.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும், கல்வித்துறையில் தமிழ்நாடு அரசின் லட்சிய இலக்கை அடைவதற்கு துணையாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு நன்றாக கல்வி கற்று, உயர்க்கல்வியில் பல பல பட்டங்கள் பெற்று உயர்ந்த நிலைக்கு சென்றிட வாழ்த்துகிறேன்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளை மாணவர்களும், ஆசிரியர்களும் நிலைநிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றி, வணக்கம்.
இவ்வாறு காணொலியில் அவர் பேசினார்.