நீலகிரியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
நீலகிரியில் அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நீலகிரி மாவட்டம் சேரங்கோடு-1 கிராமத்தில் அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு-1 கிராமம், மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் கடந்த 15.01.2024 அன்று மாலை கூடலூர்-அய்யன்கொல்லி வழிதடத்தில் 20 பயணிகளுடன் பயணம் செய்த TN-43-N-0779 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து மழவன் சேரம்பாடி பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில், மின்கம்பி அறுந்து விழுந்ததில், மேற்படி பேருந்து ஓட்டுநர் நாகராஜ் (வயது 49) த/பெ.சதாசிவம் மற்றும் பேருந்தில் பயணம் செய்த சேரங்கோடு-1 கிராமம், பூஞ்சக்கொல்லி பகுதியைச் சேர்ந்த பாலாஜி (வயது 51) த/பெ.யாலசந்திரன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
நாகராஜ் மற்றும் பாலாஜி ஆகிய இருவரையும் இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.