துவரம் பருப்பு வழங்குவதாக கூறி ரூ.2¾ கோடி மோசடி


துவரம் பருப்பு வழங்குவதாக கூறி ரூ.2¾ கோடி மோசடி
x

துவரம் பருப்பு வழங்குவதாக கூறி ரூ.2¾ கோடி மோசடி செய்ததாக சென்னை வியாபாரிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை சேர்ந்தவர் மரியசெல்வராஜ். இவர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எங்கள் நிறுவனம் மூலம் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு துவரம் பருப்பு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்து துவரம் பருப்புகளை வாங்கி வினியோகம் செய்து வருகிறோம். அந்த வகையில் சென்னையை சேர்ந்த வியாபாரிகளான செல்வராஜ், அண்ணாதுரை ஆகியோரிடம் இருந்து 1,000 டன் துவரம் பருப்பு வாங்க முடிவு செய்தோம்.

இதற்கான முன்பணமாக ரூ.8 கோடியே 10 லட்சம் செலுத்தினோம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட டன் அளவிலான துவரம் பருப்பை மட்டும் அனுப்பிவிட்டு மீதமுள்ள துவரம் பருப்பை அனுப்பவில்லை. இதையடுத்து நாங்கள் அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய போது நிலுவையில் உள்ள துவரம் பருப்புக்கான பணத்தை தருவதாக கூறி ரூ.5 கோடியே 29 லட்சத்து 69 ஆயிரத்து 483 மட்டுமே வங்கி கணக்கு மூலம் செலுத்தினர்.

மீதி தொகையான ரூ.2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 517-ஐ தராமல் தராமல் மோசடி செய்துவிட்டனர். பணத்தை திரும்ப தரும்படி கேட்ட போது எங்களை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில் செல்வராஜ், அண்ணாதுரை ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story