டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த ரெயில்வே ஊழியர் கைதானார். போலி நியமன ஆணையுடன் சென்றவர், லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார்.
டிக்கெட் பரிசோதகர் வேலை
சென்னை வில்லிவாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தில்லைவாணி (வயது 56). இவருடைய கணவர் சிரார்த்தனன் (67). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவர்களுடைய மகன் சூரிய பிரதாபன் (36). இவர், என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி ஆவார். இவருடன் பிளஸ்-2 வரை படித்த அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(36) ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் தில்லைவாணியிடம் மணிமாறன், "மத்திய மந்திரி ஒருவரின் சிபாரிசில்தான் நான் ரெயில்வேயில் வேலைக்கு சேர்ந்தேன். அதேபோல் உங்கள் மகனையும் ரெயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகர் வேலையில் சேர்த்து விடுகிறேன். அதற்கு ரூ.12 லட்சம் செலவாகும்" என்றார்.
போலி நியமன ஆணை
அதனை உண்மை என்று நம்பிய தில்லைவாணி, அடுத்த சில நாட்களில் தனது கணவருக்கு தெரியாமல் 7 தவணைகளாக 42 பவுன் நகையை அடகு வைத்து, ரூ.12 லட்சத்தை மணிமாறனிடம் கொடுத்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட மணிமாறன், தனது கூட்டாளி நாகேந்திரன் மற்றும் சிங் என்பவருடன் இணைந்து சூரிய பிரதாபனுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள கோண்டா என்ற இடத்தில் டிக்கெட் பரிசோதகர் வேலை கிடைத்து விட்டதுபோல் போலியான பணி நியமன ஆணை, அடையாள அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களை தயார் செய்து அவரிடம் கொடுத்தனர்.
சிறையில் அடைப்பு
பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட சூரிய பிரதாபன், லக்னோ சென்று அங்கு வந்த ரெயில் பெட்டியில் ஏறி பயணிகளிடம் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த உண்மையான டிக்கெட் பரிசோதகர், சூரிய பிரதாபனின் நடவடிக்கையை பார்த்து அங்குள்ள போலீசில் பிடித்து ஒப்படைத்தார்.
லக்னோ போலீசார் சூரிய பிரதாபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தில்லைவாணி, இதுகுறித்து ஐ.சி.எப். போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்கை விசாரிக்க தாமதப்படுத்தியதால் எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் ஐ.சி.எப். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை கொடுத்து ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மணிமாறனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது கூட்டாளிகள் மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.