கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் மீது ரூ.11 லட்சம் அபராதம் - அமைச்சர் சிவசங்கர்
கூடுதல் கட்டணம் வசூலித்த 953 தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பலரும் பயணம் செய்தனர். பெரும்பாலாவனர்கள் தனியார் பஸ்களில் பயன்படுத்தினர்.
அப்போது விமானக் கட்டணத்துக்கு நிகராக பெரும்பாலான தனியார் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தமிழக அரசு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையிலும், தனியார் பஸ் நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலித்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
ஆகஸ்ட் 13-ம் தேதியிலிருந்து 15 தேதி வரை தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்திருந்த நிலையில் போக்குவரத்து ஆணையர் முன்னிலையில் தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன. அப்படி ஆய்வுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் 953 பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 11 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு இதுபோல விழாக் காலங்களில் கூடுதல் விடுமுறை வருகின்ற நாட்களில் அவர்களுக்கான தேவையான பஸ்களை அரசு ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு முறையும் இந்த பிரச்னைகள் தொடர்து எழுகின்ற காரணத்தினால் இன்று போக்குவரத்து துறை ஆணையர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
அக்டோபர் மாதமும் தீபாவளிக்கு தொடர் விடுமுறை வருவதால் அதை எதிர்நோக்கி எப்படி கையாள்வது என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல நேற்று 18-ம் தேதியிலிருந்து மீண்டும் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. 22 தேதி காலை வரை ஆய்வு பணிகள் தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.