குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி


குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது, குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து இருக்கிறார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மறைவைத் தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.

77 பேர் போட்டி

ஜனவரி மாதம் 31-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த 10-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

அனல் பறந்தது

கடந்த ஒரு மாதகாலமாக அரசியல் கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தி.மு.க. அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கூட்டணித் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக தொகுதிக்கு நேரில் வந்து பிரசாரத்தை முடுக்கிவிட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் ஆதரவு திரட்டினார்.

அதுபோல் அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்பட மூத்த தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு ஓட்டுவேட்டை நடத்தினார்கள். பா.ஜனதா தலைவர்களும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார்கள்.

தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்தும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதனால் தொகுதியில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது.

மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. முன்னதாக காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் ஆதரவு திரட்டினார்.

அவர் சம்பத்நகர், கருங்கல்பாளையம் காந்திசிலை, பி.பி.அக்ரஹாரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி மக்கள் மத்தியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உங்களிடத்தில் நான் ஆதரவு கேட்க வந்து உள்ளேன். கை சின்னத்துக்கு நீங்கள் வாக்களித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

விளம்பரம் தேவை இல்லை

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பற்றி அதிகம் விளம்பரம் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. காரணம் இந்த மண்ணுக்கு சொந்தக்காரர். குறிப்பாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் குடும்பத்தின் வாரிசு. ஈ.வி.கே.சம்பத் பெற்றெடுத்த புதல்வன். எனவே சம்பத் மைந்தனுக்கு கருணாநிதியின் மைந்தன் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.

திருமகன் ஈவெராவை ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த தொகுதி மக்களின் கோரிக்கைகளை பற்றி முதல்-அமைச்சர் என்ற முறையில் என்னிடமும், அமைச்சர்களிடமும் அவர் கூறினார். யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் அவர் அகால மரணமடைந்தார். 46 வயதிலேயே அவர் நம்மை விட்டு பிரிந்து இருப்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. தந்தையின் இடத்தைப் பூர்த்தி செய்ய மகன் வருவார். இந்த இடைத்தேர்தலில் மகன் இறந்து, அந்த இடத்தை பூர்த்தி செய்ய தந்தை வந்திருக்கிறார். மகன் விட்டுச்சென்ற பணிகளை தந்தையாக இருந்து நிறைவேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இந்த 2 ஆண்டு காலத்தில் செய்திருக்கக்கூடிய சாதனைகளை சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு மிகப்பெரிய பட்டியலை எடுத்து சொல்ல வேண்டும். மகளிர் இலவசமாக பஸ்சில் பயணம் செய்யும் திட்டத்தை நம்முடைய தமிழ்நாட்டில்தான் நிறைவேற்றி இருக்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது.

காலை உணவு திட்டம்

அதேபோல், ''முதல்-அமைச்சர் காலை உணவுத் திட்டம்'' என்ற திட்டத்தை இன்றைக்கு நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். காலை உணவு திட்டம் என்பது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. நமது தமிழ்நாட்டில்தான் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

வேளாண் பெருங்குடி மக்களுக்கு, உழவர்களுக்கு இலவச மின்சார திட்டம். முதன்முதலில் இந்தியாவிலேயே தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இடையில் வந்த அ.தி.மு.க. ஆட்சி அதை எப்படியெல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

'நீட்' தேர்விற்கு விலக்கு

அதை தொடர்ந்துதான் இப்போது நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 1½ ஆண்டு காலத்திலே, 1½ லட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 'நீட்' தேர்வு விலக்கு சட்ட மசோதாவை 2 முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்.

ஆனால், இதுவரை தமிழகத்தினுடைய கவர்னரோ அல்லது மத்திய அரசோ அதைப்பற்றி சிந்திக்கவில்லை, கவலைப்படவில்லை. ஆனால், என்னுடைய லட்சியம் எல்லாம் என்னுடைய கொள்கை எல்லாம் குறுகிய காலத்திற்குள் 'நீட்' தேர்விற்குரிய விலக்கை பெற்றே தீர வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

கண்ணாடி போட்டு பாருங்கள்

இப்படி எத்தனையோ திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். நான் சில நாட்களாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் அறிவித்த திட்டங்களை எல்லாம் நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்று தவறான தகவலை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் தொடர்ந்து என்ன சொல்கிறார் என்று சொன்னால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

நான் இப்போது சொன்னேன், ஆதாரத்தோடு குறிப்பிட்டு சொன்னேன், ஆகையால் இதையெல்லாம் தயவுசெய்து எதிர்க்கட்சித் தலைவர், ஒருவேளை இது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றால், கண் டாக்டரை பார்த்து, கண்ணாடி போட்டுக் கொண்டு அதை படித்துப்பாருங்கள். நான் பேசிய பேச்சையாவது கேட்டுப்பாருங்கள். இதையெல்லாம் உண்மையா, இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

85 சதவீத பணி நிறைவேற்றம்

85 சதவீத பணிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் மிச்சம் இருக்கிறது, இல்லை என்று மறுக்கவில்லை. 5 ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத்தான் நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக சொல்லி இருக்கிறோம். 5 ஆண்டுகள் தேவையில்லை, இந்த ஆண்டுக்குள்ளாக எல்லா பணிகளையும் நிறைவேற்றி காட்டுவேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்படி மிச்சம் இருக்கக்கூடிய அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். மக்களே மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். அதுதான் பெண்களுக்கு வழங்கக்கூடிய உரிமைத் தொகை. மாதம் ரூ.1,000 வழங்குவோம் என்று சொன்னோம்.

பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

நிதிநிலையை மட்டும் ஒழுங்காக வைத்திருந்தீர்கள் என்றால், நாங்கள் வந்தவுடன் அதையும் நிறைவேற்றி இருப்போம். கொள்ளையடித்துவிட்டு போனீர்களே, கஜானாவை காலியாக மட்டுமல்ல, கடனையும் வைத்துவிட்டு போய் இருக்கிறீர்களே, அதை எல்லாம் இன்றைக்கு நாங்கள் சரிசெய்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் சரி செய்யப்பட்டவுடன் நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், வருகிற மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது, அந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1,000 எப்பொழுது வழங்கப்படும் என்று அறிவிக்க இருக்கிறோம். இது ஸ்டாலின் சொல்லும் வார்த்தை. எடப்பாடி சொன்ன வார்த்தையல்ல.

நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம், சொல்லாததையும் செய்வோம், சொன்னதையும் செய்து கொண்டே இருப்போம். இது மக்களுக்காக பாடுபடக்கூடிய ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் பக்கபலமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story