பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ஆந்திர மாநில வாலிபர்களிடம் ரூ.1¾ கோடி பறிமுதல் - கஞ்சா சோதனையில் சிக்கியது


பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ஆந்திர மாநில வாலிபர்களிடம் ரூ.1¾ கோடி பறிமுதல் - கஞ்சா சோதனையில் சிக்கியது
x

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் கஞ்சா சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஆந்திர மாநில வாலிபர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வைத்து இருந்த ரூ.1¾ கோடியை பறிமுதல் செய்தனர்.

சென்னை

வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னை நோக்கி வந்த காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 2 பேர் கையில் பெரிய பையுடன் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கினர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த மதுவிலக்கு போலீசார், 2 பேரையும் நிறுத்தி அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தனர்.

அதில் 2 பைகளிலும் கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 75 லட்சம் இருந்தது. விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (வயது 22) மற்றும் சூரஜ் (22) என்பதும், நகை வியாபாரிகளான இருவரும் சென்னை சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்காக அந்த பணத்துடன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்ததும் தெரிந்தது.

ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார், பறிமுதல் செய்த ரூ.1¾ கோடியுடன், பிடிபட்ட 2 பேரையும் செம்பியம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்கள், இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பிடிபட்ட 2 பேர் மற்றும் பறிமுதல் செய்த ரூ.1¾ கோடியையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அது ஹவாலா பணமா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story