ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகள்
மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனரக வாகனங்கள்
கணியூர் பகுதியிலிருந்து கடத்தூர் வழியாக திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளில் செயல்பட்டு வரும் காகித ஆலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள், நூற்பாலைகள் போன்றவற்றுக்கான மூலப்பொருட்களைக் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கான டிராக்டர்கள், அறுவடை எந்திரங்கள் என ஏராளமான கனரக வாகனங்கள் இந்த சாலையில் இயக்கப்படுகின்றன.
இந்த சாலை மிகவும் குறுகலாக இருந்ததாலும், ஆங்காங்கே சேதமடைந்திருந்ததாலும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்ததுடன், பல விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. எனவே சாலையை விரிவாக்கம் செய்யவும், புதிய சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து ரூ.2 கோடியே 68 லட்சம் செலவில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மெதுவாக நடப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
விபத்துகள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது-
முக்கிய சாலையான இதனை தினசரி விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். பழைய சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு நீண்ட நாட்களாக அதே நிலையில் உள்ளது. இதனால் சாலை முழுவதும் கற்கள் மற்றும் மணல் பரவிக் கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும் கனரக வாகனங்கள் செல்லும்போது எழும் புழுதியால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் புழுதியால் அருகிலுள்ள விளைநிலங்களில் உள்ள பயிர்களும் வீணாகும் நிலை உள்ளது. தற்போது இந்த பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அறுவடை எந்திரங்களை கொண்டு செல்வதும், நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை இயக்குவதும் சிரமமாக உள்ளது. எனவே கனமழைக்காலம் தொடங்கும் முன் சாலைப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.