தேனியில் ஆட்டு உரல்களை அகற்றாமல் தார்சாலை அமைத்த அவலம்


தேனியில் ஆட்டு உரல்களை அகற்றாமல் தார்சாலை அமைத்த அவலம்
x
தினத்தந்தி 9 Aug 2023 2:30 AM IST (Updated: 9 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் சாலையில் கிடந்த ஆட்டு உரல்களை அகற்றாமல் அதன் மேல் தார்சாலை அமைக்கப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது. இந்த பணிகளில் தரமில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

தேனி

தேனியில் சாலையில் கிடந்த ஆட்டு உரல்களை அகற்றாமல் அதன் மேல் தார்சாலை அமைக்கப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது. இந்த பணிகளில் தரமில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

சீரமைப்பு பணி

தேனி அல்லிநகரம் நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டன. இந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.2 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டது.

புதிய சாலை அமைக்கும் போது பழைய சாலையை அகற்றிவிட்டு அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பழைய சாலையை அகற்றும் பணி நடந்தது. அந்த பணிகள் பல இடங்களில் அரைகுறையாக நடந்த நிலையில், மேற்கொண்டு சீரமைப்பு பணிகள் தொடங்கப்படாமல் 1 மாத காலத்துக்கும் மேல் முடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அடிக்கடி வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துகளில் சிக்கி வந்தனர்.

ஆட்டு உரல் மீது சாலை

இதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. கே.ஆர்.ஆர். நகர், பாரஸ்ட்ரோடு, காந்திஜி ரோடு, சமதர்மபுரம், பழைய அரசு மருத்துவமனை சாலையின் ஒரு பகுதி, மிராண்டா லைன் போன்ற பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்துள்ளன. என்.ஆர்.டி. நகர், பழைய அரசு மருத்துவமனை சாலையின் மற்றொரு பகுதி உள்ளிட்ட இடங்களில் இன்னும் சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை.

இதற்கிடையே பணிகள் முடிவடைந்த பல இடங்களில் சாலை பணிகள் அரைகுறையாக நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதில், நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள மிராண்டா லைன், சி.2 திட்டச்சாலை சில நாட்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அந்த சாலையில் ஏற்கனவே சில ஆட்டு உரல்கள் கிடந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தாமல் ஆட்டு உரல்களின் மீது தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆட்டு உரல் மண்ணில் முழுமையாக புதைந்த நிலையிலும், மற்றொன்று அரைகுறையாக புதைந்து சுமார் அரை அடி உயரம் வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கிறது. அதை அகற்றாமல் சாலை அமைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

வேகத்தடை

இதுகுறித்து பொதுமக்கள் சிலரிடம் கேட்டபோது, "தேனி நகரில் சாலை சீரமைப்பு பணிகள் தரமற்ற நிலையில் நடக்கிறது. சாலையில் கிடந்த ஆட்டுஉரலை கூட அகற்றாமல் தார்சாலை அமைத்துள்ளனர். சமதர்மபுரம், கே.ஆர்.ஆர். நகர், பாரஸ்ட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இருந்ததை விட சாலை உயர்ந்து உள்ளதால் பாதாள சாக்கடை திட்ட குழாய்களின் மூடிகள் அமைந்துள்ள இடங்கள் குழியாக மாறி உள்ளது. அந்த வகையில் 100-க்கும் மேற்பட்ட குழிகள் சாலையில் காணப்படுவதால், முன்பு இருந்ததை விடவும் சாலை தற்போது மோசமாகி இருப்பதாக தெரிகிறது. வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேகத்தடை அகற்றப்பட்ட சில இடங்களில் வேகத்தடை அமைக்கப்படவும் இல்லை. சமதர்மபுரம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


Related Tags :
Next Story