ரூ.64 லட்சத்தில் திருக்கழுக்குன்றம் சாலை சீரமைப்பு பணி
திருக்கழுக்குன்றம் செல்லும் பி.வி.களத்தூர் சாலை சீரமைப்பு பணி ரூ.64 லட்சத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
சாலை சீரமைப்பு பணி
செங்கல்பட்டு மாவட்டம், ஜி.எஸ்.டி சாலையிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் பி.வி.களத்தூர் சாலையின் மொத்த நீளம் 13.6 கி.மீ ஆகும். இந்த சாலையில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனத்துறையின் அனுமதி கிடைக்காததால் 12 வருடங்களுக்கு மேலாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.
தற்பொழுது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அவர்களின் தொடர் முயற்சியால் சாலையை சீரமைக்க வனத்துறையின் அனுமதி வழங்கியது. இந்நிலையில் தற்போது இந்த சாலையில் சீரமைப்பு பணி ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு பணிகள் நேற்று தொடங்கியது.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
சாலை சீரமைப்பு பணியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்த சாலையை சீரமைப்பதன் மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
இந்த நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாகிதா பர்வின், எம்.எல்.ஏ.க்கள் க.செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.டி.அரசு, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.