அரியலூரில் ரூ.129 கோடியில் சாலை விரிவாக்கம்
சிமெண்டு ஆலை லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க அரியலூரில் ரூ.129 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ரூ.129 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2,200 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதிவாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில் நடப்பு நிதி ஆண்டு 255.02 கி.மீ. நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலை (வழி) செந்துறை வரை 17.20 கி.மீ. உள்ள சாலையை ரூ.129 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி இந்த வழித்தடத்தில் உள்ள கொல்லாபுரம், தாமரைக்குளம், ஒட்டக்கோவில், பொய்யாதநல்லூர், ராயம்புரம் மற்றும் அகரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சாலையோரங்களில் மழைநீர் வடிகால் சுமார் 6.90 கி.மீ. நீளத்திற்கு கட்டப்படவுள்ளது. இச்சாலையில் 13 சிறுபாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் 38 சிறுபாலங்கள் புதிதாக கட்டப்படவுள்ளன. சாலையின் இரு மருங்கிலும் 3,400 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வழித்தடமாக அமையும். இப்பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.129 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணியானது 21 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு சுரங்கங்களிலிருந்து சுண்ணாம்பு ஏற்றிச்செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இச்சாலை பயன்பாட்டிற்கு வரும்பொழுது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், அமைச்சர் அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உத்தரண்டி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, குன்னம் சட்டமன்ற தொகுதி மக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க இ- புகார் மையத்தை தனது தொகுதி அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் குன்னம் தொகுதி பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா முதல் அரியலூர் மாவட்டம் செந்துறை வரை உள்ளது. இதனால் பொதுமக்கள் குன்னம் சட்டமன்ற அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார்களை தெரிவிப்பதில் பல்வேறு சிரமம் இருப்பதால் www.nammakunnam.com என்ற இணையதளம் அல்லது 9593888111 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.