வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்


வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்
x

வேலூரில் குழந்தையின் சடலத்துடன் தாய் 10 கி.மீ. நடந்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே உயிரிழந்தது.

இதனை தொடர்ந்து, உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அல்லேரி மலைக்கிராமத்தில் இன்று நேரில் ஆய்வு செய்து பாம்பு கடியால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அல்லேரி மலைக் கிராமத்தில் சாலை வசதி மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உறுதியளித்தார்.

இந்த நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்தனர். மேலும் சாலையை அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.


Next Story