பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து சாலை மறியல்
கீழையூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி:
சாலை மறியல்
2022-23-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படாததை கண்டித்தும், தொடர்ந்து பயிர்க் காப்பீட்டு தொகை கிடைக்காமல் புறக்கணிக்கப்படும் கிராமங்களாக கீழையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் இருக்கின்றன. உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீழையூர் கடை தெருவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் சித்தார்த்தன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராமலிங்கம், பன்னீர்செல்வம் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ், வேளாண்மை துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், கீழ்வேளூர் மண்டல துணை தாசில்தார் இளமதி, வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து முழு விவர அறிக்கையை தயார் செய்து மேல்அதிகாரிகளுக்கு அனுப்புவதாக தாசில்தார் உறுதி அளித்தார்.
1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.